தமிழகம் தகவல் தொழில்நுட்ப துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பதால் அனைத்து தரப்பினரும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

Published Date: March 5, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் ஐடி துறை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்:

சென்னை:

தமிழகம் தகவல் தொழில்நுட்ப துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பதால் அனைத்து தரப்பினரும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

அசோசியேஷன் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸ், சென்னை அமைப்பு சார்பில் 'சிஏ மகாவீர் முனோத் நினைவு' சொற்பொழிவும், தமிழ்நாட்டில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியும், சென்னை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டஸ், சென்னை தலைவர் ராகேஷ் சிங்வி வரவேற்புரையாற்றினார். சிஏ. மகாவீர் முனோத் நினைவு அறக்கட்டளை கமிட்டி தலைவர் பி.ராஜேந்திர குமார் தலைமை உரையாற்றும்போது, சார்ட்டட் அக்கவுண்டண்ட் படிக்கும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 பேருக்கு ரூபாய் 5 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றார்.

பின்னர் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

சிஏ. மகாவீர் முனோத் நினைவாக சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது புனித பணியாகும். நாட்டில் 1980 களில் பர்சனல் கம்ப்யூட்டர் வந்தபோதே கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட தொடங்கிவிட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுன புரட்சி நிகழ்ந்தது. இன்று செயற்கை நுண்ணறிவு வரை பெரும் புரட்சியை நிகழ்ந்து வருகிறது. 

தமிழகத்தில் முதன்முதலில் சென்னை தரமணியில் டைடல் பார்க் என்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டது. மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் பெறும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

பிற நகரங்களை விட தமிழகத்தில் தொழில் செய்வதற்கான இடம், தொழில்நுட்பம் சிறந்த பணியாளர்கள் கிடைப்பதாலும் அதிவேக இணைய இணைப்பு டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றாலும் முதலீட்டாளர்கள் பெரும் நிறுவனங்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப துறையின் வியக்கத்தக்க வளர்ச்சியால் மாணவர்கள், இளைஞர்களும் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிறைவில் அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸ் சென்னை அமைப்பின் செயலாளர் விக்ரம் சிங்வி நன்றி தெரிவித்தார்.

Media: Hindu Tamil